NFTECHQ

Monday 4 March 2013



ஊக்கமது கைவிடேல்!
பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். இது அவர்கள் சந்திக்கவிருக்கும் ஆறாவது தேர்தல். எனவே புதிதல்ல. ஆனால் இது கடந்த ஐந்து தேர்தல் போல் அல்ல. ஏனெனில் இம் முறை அதிக வாக்குகளைப் பெறும் ஒரு சங்கத்திற்கு மட்டும் அங்கீகரம் என்ற பழைய நடைமுறை இல்லை. பெறும் வாக்குகளுக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு. இது போட்டியை கடுமையாக்கியுள்ளது. கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு தங்கள் தனித்தன்மையினை நிலை நாட்டிடும் ஆவல் கூடியுள்ளது. போட்டியிடும் சங்கங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. 18 சங்கங்கள் களத்தில் உள்ளன.

நிர்வாகத்தின் உத்திரவினை மேலோட்டமாகப் பார்த்தால் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் சட்டங்களில் ஓட்டையை கண்டுபிடித்து பயன்படுத்தும் புத்திசாலிகள் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐம்பது சதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றுவிட்டால் அனைத்து சலுகைகளையும் ஒரே ஒரு சங்கம் அனுபவிக்க முடியும். எனவே தன் வசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் முழுமையாக அவர்கள் பயன்படுத்தக் கூடும்.

போட்டியிடும் சங்கங்கள் சமதளத்தில் போட்டியிடவில்லை.  கடந்த எட்டு ஆண்டுகால அங்கீகார வாய்ப்பினை பெற்றதால் அந்த சங்கம் தனது ஆதிக்கத்தை நிறுவன வடிவில் அமைத்துக் கொண்டுள்ளது. எனவே  அந்த பலமான ஆதிக்கத்தை எதிர்த்து போட்டியில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அது ஆதிக்கத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான வாய்ப்பு என்ற உணர்வினைத் தரும். அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டும், திட்டமிட வேண்டும்.

கடந்த எட்டு ஆண்டுகளில்  உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாத அணுகுமுறை காரணமாக சிந்தனையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாம் பலவற்றை இழப்பதற்கு காரணமாகிவிட்டது.

படைப்பாளி என்பவர் யார்? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? எவற்றை மாற்றிட வேண்டும்? எது சாத்தியம் என்பதை தெளிவாக கூறுபவரே படைப்பாளியாவார்!  அப்படிப்பட்ட படைப்பாளி இல்லாமையால் நாம் பெற்றுக் கொண்டிருந்தவைகளை இழந்து நிற்கிறோம்.  காரணம் என்னவென்று அறிந்தும் கைபிசைந்து நிற்கிறோம். ஆனால் காலம் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது.

ஒரு நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் வாய்ப்பு நம் முன் உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.  ஒவ்வொரு ஊழியரையும் நேரில் சந்திப்போம்.  இழந்தவைகள் பற்றி விளக்குவோம். இழப்பதற்கு காரணமானவர்களை சுட்டிக் காட்டுவோம். அவர்களுக்கு மீண்டும் வாய்பளிப்பதா? நம் கை விரலைக் கொண்டு நம் கண்களைக் குத்திக் கொள்வதா? வேண்டவே வேண்டாம் அந்த விபரீதம் என்பதை தெளிவுபட புரிய வைப்போம்.  சிலந்தி விடா முயற்சியுடன் வலை பின்னுவதைப் போல நம்பிக்கையுடன், விடா முயற்சி செய்வோம். மெய் வருந்த கூலி கிடைக்கும். ஊக்கமது கைவிடேல்! 

No comments:

Post a Comment