NFTECHQ

Friday 15 August 2014

தில்லையாடி வள்ளியம்மை

காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டிய தில்லையாடி வள்ளியம்மை
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதுகெலும்பு அண்ணல் காந்தியடிகள். காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டியவர் தில்லையாடி வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக பல பரிமாணங்களில் இந்திய சுதந்திர தாக்கத்திற்கு வித்திட்டவர் தில்லையாடி வள்ளியம்மை. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் உயிர் விட்ட முதல் பெண்மணியும் அவரே.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி முதலியார். நெசவுத் தொழிலாளியான இவர் பிழைப்புத் தேடி தென்னாபிரிக்காவின் ஜோகனாஸ்பர்க் சென்றார். அங்கு 1898-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பிறந்தவர் வள்ளியம்மை.
கனவுகளோடு தென்னாபிரிக்கா சென்ற இந்தியர்கள் வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றின் வழக்குகளை முடிக்க அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த காந்தியடிகள், இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பினார். இதனை எதிர்த்து போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத்தரவும் துணிந்தார்.
இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் சிறுமி வள்ளியம்மை தவறாமல் கலந்துக்கொண்டார். காந்தியடிகளின் சொற்பெழிவுகளால் பெரிதும் கவரப்பட்ட வள்ளியம்மை பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படையில் அங்கமானார்.
தென்னாபிரிக்காவிற்கு வரும் இந்தியர்களை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கடுமையான சட்டங்களை அமல்ப்படுத்தினர். இதனை எதிர்த்து 1913 -ம் ஆண்டு, ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வள்ளியம்மை.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையில் எண்ணிலடங்கா கொடுமைகளை அனுபவித்தார் வள்ளியம்மை. சுகாதாரமற்ற சூழல் வள்ளியம்மையை நோய் தாக்குதலுக்கு உட்படுத்தியது. அபராத தொகையை கட்டி விட்டு சிறையிலிருந்து செல்லும் படி ஆங்கிலேயர்கள் கூறியதை பொருட்படுத்தாத வள்ளியம்மை, சிறையிலேயே உயிர் விடவும் துணிந்தார்.
வள்ளியம்மையின் உடல் நிலை மோசமாவதை கண்ட ஆங்கிலேயே போலீசார், அவரது தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவித்தனர். விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த வள்ளியம்மை என்னும் தீபம் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து அணைந்து போனது.
இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம் என அண்ணல் காந்தியடிகள் மனம் உருகினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயர்நீத்த முதல் பெண் போராளி ஒரு தமிழர் என்பது நமக்கும் பெருமை தானே.


No comments:

Post a Comment