NFTECHQ

Friday 14 November 2014

நேரு

நம் தேசத்தைக் கட்டமைத்த தலையாய தலைவர்களுள் ஒருவர் நேரு. இன்று 125-வது பிறந்த நாள். இந்தியாவும் உலகமும் மிக முக்கியமான, நெருக்கடியான கட்டத்தில் நிற்கும் தருணத்தில், நேரு மிகவும் தீவிரமாக நினைவு கூறப்பட வேண்டியவராகிறார்.
20-ம் நூற்றாண்டில் இந்தியா உலகுக்கு அளித்த மகத்தான அரசியல் தலைவராக நேருவைச் சொல்லலாம்.
நேரு உண்மையில் இந்தியத் தலைவராக மட்டுமல்ல, ஒரு உலகத் தலைவராகவே செயல்பட்டார். அதிகாரப் பசியின் மொழியில் உலகத் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அமைதியின் மொழியில் பேசினார் நேரு: “இன்றைய உலகத்தைப் பொறுத்தவரை, திட்டமிட்டு நிகழ்த்தப்படும் வன்முறையின் ஆயுதங்களை நாம் யாரும் தூக்கியெறியத் துணிய மாட்டோம்… உலக நாடுகளெல்லாம் தங்களுக்குள் ரத்த வெறி கொண்ட பார்வையை வீசுகின்றன என்று காந்தி ஒரு முறை சொன்னார். என்னால் முடிந்த வரை என்னுடைய கண்களைத் தெளிவாக வைத்துக்கொள்ளவே முயல்கிறேன்; ரத்த வெறியேறிய பார்வையால் தெளிவான சிந்தனையோ, தெளிவான செயல்பாடோ சாத்தியமாகாது.”
வேறுபட்ட இனங்கள் ஒன்றுசேர்ந்து சகவாழ்வு வாழ்வதுதான் ஒரு நாட்டின் அமைதிக்கும், ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும் அடிப்படை என்பதை நேரு அளவுக்கு நம்பியவரும் செயல்படுத்திக் காட்டியவரும் உலக அளவில் கிடையாது. ஒரு சமுதாயமோ நாடோ தனது சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே உலகம் அந்தச் சமுதாயத்தையோ நாட்டையோ மதிப்பிடும் என்பதை அறிந்தவர் நேரு. பாகிஸ்தான் தன்னுடைய சிறுபான்மை இனத்தவரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்காக, இந்தியாவை இந்து பாகிஸ்தானாக ஆக அனுமதிக்க முடியாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இந்தியாவுக்கு அதன் பன்மைத்தன்மை பெருமையாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக அல்ல என்பதுதான் நேருவின் ஆழமான நம்பிக்கை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்கும் நேரு காட்டிய வழி. இதற்காகத்தான் நேரு இன்று வலதுசாரிகளால் வெறுக்கப்படுகிறார்.
இந்தியாவை காந்தியின் விருப்பத்துக்கு மாறாக தொழில்மயத்தின் பாதையில் நேரு அழைத்துச்சென்றார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. நேருவின் நவீனத்துவத்துக்கு எத்தனையோ விமர்சகர்கள் உண்டு, காந்தியில் ஆரம்பித்து. ஆனால், இன்றைக்குப் பார்க்கும்போது அதுவும் காந்தியத்தின் மற்றுமொரு பரிமாணமாகவே தெரிகிறது. ஒட்டுமொத்த மாகச் சுரண்டப்பட்ட தேசம் விடுதலை அடையும் சூழலில், உலக நாடுகளோ நவீனத்துவத்தின் பாதையில் வெகு தூரம் கடந்துவிட்டிருந்தன. இந்தியாவின் அடிமட்டத்தில் இருந்த பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவு, சுகாதார வசதிகள் உட்பட அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமே கிடைக்கப்பெறாத நிலையில்தான் இருந்தார்கள். அவர் களுடைய வாழ்க்கை நிலையை மேலே எடுத்துச்செல்வதில் நவீனத் தொழில்நுட்ப யுகம் அளித்த சாத்தியங்களையே நேரு பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். தாராளமயவாத, உலகமயவாதக் காலத்து ஆட்சியாளர்களைப் போலல்லாமல், நவீன யுகத்தைச் சற்று சந்தேகக் கண்ணோடுதான் நேரு பார்த்தார். நவீன யுகத்தின் எல்லையை அவர் உணர்ந்திருந்தார் என்பதையே நேருவின் இந்தக் கூற்று நிரூபிக்கிறது: “இயந்திரங்களைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால், அவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட மனிதர்கள் போலவே ஆகிவிடுகின்றன. சிந்திக்கவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்கூட ஆரம்பித்திருக்கின்றன. இயந்திரங்கள் மனிதர்களாக ஆகும் அதே நேரத்தில், மனிதர்களெல்லாம் மேலும் மேலும் இயந்திரங்களாகிக் கொண்டிருக்கிறார்கள். மனித மனம் அதன் சிந்தனா சக்தியை இழந்து மேலும் மேலும் இயந்திரத்தைப் போலவே ஆகிவிடும். அதுதான் மனித குலத்தின் மாபெரும் சோகம்.”
மனிதம் காக்கப்பட வேண்டும்.
நாட்டின் பன்முகத்தன்மை
காக்கப்பட வேண்டும்.
மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும்.
பொதுத் துறைகள் காக்கப்பட வேண்டும்.

இதுவே  நேருவுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

No comments:

Post a Comment