NFTECHQ

Sunday 30 November 2014

அறிவோம் உண்மையை

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நலிவடைந்ததற்குக் காரணம். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் என்று அரசும், நிர்வாகமும், ஊடகங்களும் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க   முயல்கின்றன.
வருமானம் குறைந்ததே நலிவுக்குக் காரணம்.  காரணம என்பதே யதார்த்தம்.
கடந்த 5 ஆண்டுகளில் சம்பளத்துக்கான செலவு பற்றிய கணக்கு விபரம்
2009-10 -ரூ 13455.04 கோடி
2010-11-ரூ 13790.95 கோடி
2011-12:ரூ 13406.04 கோடி
2012-13-ரூ 13757.82 கோடி
கடந்த 5 ஆண்டுகளில்
வருமானம் பற்றிய விபரம்
2007-2008-ரூ 32842.30 கோடி
2008-09-ரூ 30169.42 கோடி
2009-10-ரூ.27913.44 கோடி
2010-11-ரூ 27044.71 கோடி
2011-12-ரூ 25982.13 கோடி
 2012-13-ரூ 25654.81 கோடி
வருமானத்தில் சம்பளத்துக்கான செலவின் சதவிகிதம்
2009-10- 48%
2010-11- 51%
2011-12- 51.6%
2012-13- 53.6%a
சம்பளத்துக்கான செலவு ஆண்டுக்கு 13000 கோடி என்ற அளவிலேயே உள்ளது.
ஆனால் வருமானம் ரூபாய் 32000 கோடியிலிருந்து
ரூபாய் 25000 கோடியாகக் குறைந்துள்ளது.
7000 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்?
இதற்கு யார் காரணம்?
இது குறித்து சில கருத்துக்களை வெளியிடவுள்ளோம். அந்தக் கருத்துக்களை உரியவர்கள் உரிய முறையில் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறோம்.

Friday 28 November 2014

எங்கெல்ஸ் பிறந்த தினம்



கம்யூனிச சிந்தாந்தத்தை கார்ல் மார்க்ஸுடன் இணைந்து வகுத்த ப்ரடெரிக் எங்கெல்ஸ், 1820-ம் ஆண்டு, நவம்பர் 28ம் நாள் ஜெர்மனியில் பிறந்தார். எங்கெல்ஸ், தனது தந்தையின் நூற்பு ஆலையில் பணிபுரிந்தபோது, முதலாளித்துவத்தின் வரம்பற்ற அடிமைத்தனத்தை நேரில் பார்த்து அதன் மீது வெறுப்பு கொண்டார். பின்னாளில், கார்ல் மார்க்ஸுடன் நட்பு ஏற்பட்ட பிறகு, அவருடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கினார்.
மேலும், மார்க்ஸூடன் இணைந்து கம்யூனிச அறிக்கையை எழுதி வெளியிட்டார். கார்ல் மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு, மூலதனம் நூலின் பல்வேறு தொகுதிகளை வெளியிட்டார் எங்கெல்ஸ். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவர்

வாழ்த்துக்கள்



தொழிற்சங்கத்தின்அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
கொள்கையற்ற நிர்வாகம், கோட்பாடற்ற அரசாங்கம் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் கொள்கைள் இவற்றை எதிர்த்து கடுமையாகப் போராடினால் மட்டுமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Wednesday 26 November 2014

வேலைநிறுத்தம்



25.11.2014 அன்று நிர்வாகத்துடன் JAC நடத்திய பேச்சுவார்ர்த்தையில்
பேச்சும் வார்த்தையும் மட்டுமே இருந்தது.
ஒரு நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக நிர்வாகம் செயல்படவில்லை.
நிர்வாகம் தனது மோசமான நிலைபாட்டில் உறுதியாக இருக்குமாம்.
நமக்கு போதனைகள் மட்டுமே சொல்லுமாம். இந்நிலையில் நமது நியாயமான எதிர்ப்பையும் கோபத்தையும் பொங்கி எழுந்து காட்டுவதைத் தவிர வேறு வழி உண்டோ?
27.11.2014 அன்று நமது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.  

Monday 24 November 2014

பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா?

இந்தியா தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். “பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அது நாட்டுக்குப் பெருத்த சுமை. ஏழை மக்களின் பணத்தைக் கொட்டி அழலாமா?” என்று உபதேசித்தார். மார்க்ரெட் தாட்சரைப் போல “வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று அவரும் சொன்னார். இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முரசறைந்தன. அப்போது, பாஜக அதை எதிர்த்தது. தொழிலாளர்களும் இடதுசாரிகளும் அது தவறென்று வீதிக்கு வந்து போராடினார்கள். தொழிலாளர்கள் தேசத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகப் போராடுவதாய்க் குற்றம் சுமத்தினார்கள்.
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பின்னர், லாபத்தில் இயங்கினாலும் முக்கியத்துவம் அல்லாத தொழில் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். அது சரிதான் என்று ஒரு ஒப்புதலை உருவாக்கினார்கள். ‘நஷ்டத்தில் இயங்குகிற தொழில்களைத் தனியார் நடத்தினால் மட்டும் எப்படி லாபம் வரும்?’ என்ற கேள்விக்கு “உயர் தொழில்நுட்பத்தோடு அந்த நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கும்” என்று அவர்களே தட்டிக் கொடுத்துக் கொண்டார்கள். அப்படிச் சொல்லித்தான் சென்னை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் பிரம் மாண்டமான குடியிருப்புக் கட்டிடங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, தொழிற்சாலைகளை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் உயர்ந்த தொழில் நுட்பம் பற்றித்தான் பேசினார்களோ என்னவோ?
விற்றாலும் வாங்கினாலும்
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். ஆட்சியாளர்கள் போபர்ஸ் பீரங்கிகளை வாங்கினாலும், ஹெலிகாப்டர் வாங்கினாலும் பல நூறு கோடிகள் அரசுக்கு நஷ்டம். அலைக்கற்றையை விற்றாலும், நிலக்கரிப் படுகையை விற்றாலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம். இதில் முறைகேடு ஏதும் இல்லை, சந்தையின் விதி என்று அவர்கள் சான்றிதழ் கொடுத்தார்கள்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு பொதுத் துறைகள் பலப்படுத்தப்படும்” என்று சொன்னது. தற்போது அருண் ஜேட்லி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ‘நஷ்டத்தில் இயங்குவது’, ‘விற்கப்படுகிறது’ என்ற இரண்டையும் லாவகமாக இணைத்து, ‘நஷ்டத்தில் இயங்குவது விற்கப்படுகிறது’ என்ற பொதுப்புத்தியை அவர்கள் கட்டமைத்துவிட்டார்கள். இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் தவிர, இதர நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றனவா?
பொன்முட்டையிடும் வாத்தை…
நிறுவனங்களின் 2013-14 ஆண்டறிக்கைகளின் பட்டியலில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாப வீதம் அவற்றின் வருவாயில் 5.21% மட்டுமே. இது பொதுத் துறையில் 5.12%. இதில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. அரசுக்குச் செலுத்திய தொகையை ஒப்பிட்டால், ரூ. 10.82 லட்சம் கோடி வருவாய் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு கஜானாவுக்கு ரூ. 68,474 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாயுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.1,38,299 கோடியை அரசு கஜனாவுக்கு வழங்கியுள்ளன. இதே நிலைதான் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பொன்முட்டை இடும் வாத்தாய், அமுதசுரபியாய், வற்றாத நீரூற்றாய், பொய்க்காத பெருமழையாய் விளங்கும் இந்த நிறுவனங்களைத்தான் தனியாருக்கு பாஜக அரசாங்கம் விற்கப்போகிறது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் பிலாய் ஆலை மட்டும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந் திருக்கிறது. அதன் குடியிருப்புகள் 9,013 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகிறார்கள்.
1956-ல் அரசு, காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 5 ஆண்டுத் திட்டத்துக்கு இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் அரசுக்கு ரூ. 7.25 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்த 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் இதுவரையிலும் அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் துறையில் தனியாரும் அந்நிய மூலதனமும் அனுமதிக்கப்பட்டி ருக்கிறது. அதை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
இழப்பு யாருக்கு?
அவர்கள் முதலில் நஷ்டத்தில் இயங்குவதை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பிறகு, முக்கியமற்ற துறைகளை விற்கப்போவதாகச் சொன்னார்கள். இப்போது லாபத்தில் இயங்கும் முக்கியமான துறைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஏலமிட்டது காங்கிரஸ். இப்போது ஏலமிட்டுக் கொண்டிருப்பது பாஜக. இரண்டு பேர் காலத்திலும் விற்கப்பட்ட 2-ஜியையும், நிலக்கரிப் படுகையையும் நீதிமன்றம் தலையிட்டு, ஒட்டு மொத்தமாக ரத்து செய்யும் அளவுக்கு மிகவும் நேர்மையாக இவர்கள் நடந்து கொண்டார்கள். அவையெல்லாம் பொதுப் புத்தியில் நியாயம் என்று கட்டமைக்கப்பட்டே எதிர்ப்பின்றி விற்கப்பட்டன.

மேலே சொன்ன பொதுத் துறைகளிலிருந்து அரசு கஜானாவுக்குச் சென்ற வரிகளும் லாபப் பங்குகளும் இந்திய மக்களுக்குச் சாலைகளாகவும் கல்வியாகவும் மருத்துவ வசதிகளாகவும், பொது விநியோகத் துறை மானியமாகவும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்த தொகை மட்டும் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய். இவை நிறுத்தப்பட்டால், மக்கள் நலத்திட்டங்களும் மானியங்களும் வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.

கொண்டாடுவோம்



நவம்பர் 24.
NFPTE  உதயமான தினம்.
60 ஆண்டுகள் தபால்,
தந்தி ,தொலைபேசி ஊழியர்களுக்காக
உழைத்திட்ட இயக்கம்.
அரசின் அடக்குமுறைகள்
தொழில்நுட்பம் தந்திட்ட சவால்கள் என அனைத்தையும் துணிவுடனும் அறிவுடந்ம் சந்தித்த இயக்கம் NFPTE.
லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வாழ்வு தந்திட்ட இயக்கம்.
லட்சக்கணக்கான ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு வழிகண்ட இயக்கம்.
தன்னலமற்ற தியாக வாழ்க்கை வாழ்ந்து உழிப்பர்களுக்காக ஒப்பற்ற சாதனைகளைப் படைத்திட்ட
தலைவர்கள் வளர்த்திட்ட
இயக்கம்.
தொழிற்சங்க வரலாற்றில் விய்த்தகு   சாதனைகள் படைத்து ஒரு வரலாற்றுக் கருவூலமாக வாழும் இயக்கம் NFPTE.
இதன் மகத்துவத்தை உணர்வோம்.
இந்த இயக்கத்தைப் போற்றி கொண்டாடுவோம்.
இந்த இயக்கம் என்னும் ஒளி தீபம் அணையாமல் காப்போம்.



Friday 21 November 2014

நவம்பர் 27 வேலைநிறுத்தம்

நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களின் நியாயமான பிரச்னைகளை காலத்தே தீர்த்து வைக்க வேனண்டியது அதன் கடமை. அந்த கடமையிலிருந்து நிறுவனம் தவறியிருக்கிறது. இதன் விளைவே போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் போகிறது. பல முறை பேச்சு வார்த்தை, பல முறை போராட்டங்கள் என நடந்த பின்னரும் ஒரு நிர்வாகம் இவ்வாறு அமைதி காப்பது அதற்கு அழகல்ல. பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் நிர்வாகம் பறித்துள்ளது. போதும் என்ற அளவைத் தாண்டி பொறுத்து விட்டோம். காலத்தே போராட்வில்லை
என்ற் ஆதங்க்கமும் ஊழியர்களுக்கு உண்டு. உற்பத்தியுடன் இணைந்த போனசை இலாபத்துடன் கூடிய ஊக்க ஊதியம் என்று போட்ட உடன்பாடு பெரும் சிக்கலை உருவாக்கியது. இலாபம் ஈட்டாத பல்வேறு அரசு மற்றும் பொத்த் துறை ஊழியர்கள் போனஸ் பெற்று வருவதை அறிவோம்.
இந்த போனசை வழங்குவதால் நிறுவனம் அழிந்து ஒழிந்து விடாது. இதைப் போன்றே ஊரதிய தேக்க நிலை – இளைய தோழர்களின் ஊதிய இழப்பு பொன்றவை “மனித வள மேம்பாட்டின்” அ டிப்படையில் ஒரு நிறுவனம் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டிய பிரச்னைகள்.
போராடினால் மட்டுமே தீர்வு வரும் என்ற நிலை உருவாகி விட்டது. போராடாமல் தீர்வை உருவாக்கும் நிர்வாக நடைமுறை இல்லாமல் போய்விட்டது.
எனவே நிர்வாகம் நம் மீது திணித்த நவம்பர் 27 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்.



Thursday 20 November 2014

ஆண்ட்ராய்டும் விண்டோஸூம்

தற்போது கணினி உலகம், செல்போன்களிலேயே வந்துவிட்டது. தனக்குப் பிடித்தமான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்வதுடன், விடியோ மற்றும் வலைதளத்தைக் காண்பது, வலைதளம் மூலம் உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது, விளையாட்டு உள்ளிட்ட தேவைக்கேற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் முன்பு கணினியில் மட்டுமே சாத்தியம்.
ஆனால், செல்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயன்பாடு வந்ததையடுத்து, இந்த வசதிகள் அனைத்தும் செல்போன்களிலேயே சாத்தியமாகியுள்ளன. இதனால், பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளாக்பெர்ரி, ஆப்பிள் போன்ற செல்போன்களுக்கென தனி இயங்குதளம் உள்ளது. சோனி உள்ளிட்ட ஒரு சில நிறுவன செல்போன் நிறுவனங்கள் மட்டுமே மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின.
ஆனால், சாதாரண மக்களால் எட்டாத உயரத்தில் அவற்றின் விலை உள்ளதால் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. மேலும், விண்டோஸ் இயங்குதள செல்போன்களில் அப்ளிகேஷன் எனப்படும் மென்பொருள்களையும் இலவசமாகப் பெற முடியவில்லை என்ற ஏக்கமும் விண்டோஸ் இயங்குதள உபயோகிப்பாளர்களிடையே உள்ளது.
இதனால், விலை குறைவாக உள்ளதால் மைக்ரோமேக்ஸ், ஜியோனி மற்றும் சாம்சங் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட் போன்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால், செல்போன் விற்பனையில் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் தனது "எக்ஸ்' இயங்குதளத்தை நம்பி இருந்தது. இதனால், ஸ்மார்ட் போன் சந்தையில் நோக்கியா செல்போன் நிறுவனம் சரிவை சந்தித்தது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா செல்போன் நிறுவனத்தை ரூ.46 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
இதன்மூலம் தனது நிறுவன மென்பொருள்களை கணினி மட்டுமன்றி செல்போன்களிலும் கோலோச்ச செய்ய வேண்டும் எனும் நோக்கில், வாங்கியவுடன் நோக்கியா செல்போன்களில் ஏற்கெனவே இருந்த "எக்ஸ்' இயங்குதளத்திற்கு பதிலாக விண்டோஸ் இயங்குதளத்தையும் புகுத்தியுள்ளது.
ஆனால், மென்பொருள் துறையில் கோலோச்சும் அளவிற்கு மைக்ரோசாப்ட் இதர துறைகளில் முதலிடம் பிடிக்குமா என்பதே கேள்வி.
உதாரணமாக இணையதளத்தில் தேடுபொறி என்றாலே "கூகுள்'தான் என அனைவரும் கூறிவிடும் அளவில் அது முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக முதலிடம் பிடிக்கும் வகையில் "பிங்' என்ற தேடுபொறியை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், முடியவில்லை.
அதுபோல சமூக வலைதளம் என்றாலே "பேஸ்புக்'தான் என்ற நிலையுள்ளது. உலக அளவில் செல்போன் மூலமாக மட்டுமே தினசரி 100 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் உபயோகின்றனர்.
இதிலும் கால்பதிக்கும் வகையில் வெளிவந்ததுதான் மைக்ரோசாப்ட்டின் "யம்மர்' சமூக வலைதளம். இதிலும் மைக்ரோசாப்ட்டால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.
முகநூல் சமூக வலைதளம் விளம்பர வருவாயை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், யம்மர் சமூக வலைதளம் உறுப்பினர்களின் கட்டணத்தைச் சார்ந்துள்ளது. மேலும், இதில் தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதப்படுவதால், உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தத் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளன.
ஆக, மைக்ரோசாப்ட் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற நிலை தொடர்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் இணையதளத்தை தொடர்புகொள்ளும்போது அவரைப் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு உண்டு.
இதை சாதகமாகப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் இயங்குதள நோக்கியா செல்போன்களில் தகவல் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், குறைந்த விலையில் வெளியிட்டு ஆண்ட்ராய்டின் போட்டியைச் சமாளிக்குமா அல்லது ஆண்ட்ராய்டை ஆளவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Sunday 16 November 2014

மார்க்ஸ் என்னும் மாமனிதன்

 “உலகத்தின் உடைமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை.
அவற்றைக் காலப் போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்களுக்கு தனி உடைமையாக்கிக் கொண்டனர்.
தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர்.
அதனால்தான் இருப்பவர்கள் சிலருமாக இல்லாதவர்கள் பலருமாகச் சமுதாயம் மாறி வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள்  ஒன்று திரண்டு  போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்
இதுதான் பொதுவுடைமைக் கொள்கை. இந்தச் சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம்” இப்படிப்பட்ட ஒரு முன்னுரயுடன் தொடங்குகிறது அந்த வீடியோ காட்சி. தொடர்கிறது
“அவர்தான் ஜெர்மானிய தாடிக்காரன் என்று அறிஞ்ர்களால் மரியாதையோடும்,நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த்வர் 
கார்ல் மார்க்ஸ். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும் மகனை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் மார்க்சுக்கு மதம் இனம் இவற்றில் பற்று இல்லை. மதத் தலைவர்களின் போக்கை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காது என்று அவர் நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிக்ரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே பான் பலகலைக்கழகத்தில் சட்டத் துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும் தத்துவத்திலும் அவர் கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடைமைத் தத்துவம் வேர் விடத் துவங்கியது.
தனது பொதுவுடைமைக் கருத்துக்களை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக் கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரைக் கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.
சட்டத்தை ஏற்கெனவே விரும்பாத மார்க்ஸ் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841ஆம் ஆண்டில் அவருக்குத் தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலக்கழக நாட்களில் ஜென்னி எண்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னி அவரை விரும்பினார். ஆனால் பொருளாதாரத்தில் இருவருக்கும் இருந்த வேற்றுமைகளைக் காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தைத் தூக்கி எரறிந்த ஜென்னி கடைசி வரையில் கார்ல் மார்க்சுக்கு ஆணி வேராக இருந்தார்.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மனியின் பத்திரிக்கை ஒன்றுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மார்க்ஸ்ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்க்கம் தடை விதித்தது. எனவே பாரிசுக்குச் சென்றார். அங்கு பல அரசியல் கட்டுரைகளைப் பல பத்திரிக்கைகளில் எழுதினார்.அவை ரஷ்ய அரசாங்க்கத்தைத் தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரீஸ். இச் சமமயத்தில் மார்க்சுக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவரின் நட்பு கிடைத்தது. ஒரு முதலாளியின் மகனாக இருந்தும் தொழிலாளிகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்க்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்சும் ஏங்கல்சும் திட்டம் தீட்டினர். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பேராடி எப்படிப் பெறுவது என்பதை விளக்கும்  தூண்டுப் பிரசுரங்களை பொதுவுடைமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர்.
அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறைப் புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ்.
1847ல் லண்டனில் தொழிலாளர் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூணிஸ்ட் மேனிபெஸ்ட்டோ என்ற கம்யூனிச சித்தாந்ததை அறிமுகப்படுத்தி உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்  என்ற முழக்கத்தை மார்க்சும் ஏங்க்கல்சும் முன் வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849ஆம் ஆண்டு ஏங்கல்ஸின்
உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தரமாகத் தங்க்கினார்.. பெரும்பாலன நேரங்க்களை அவர் பிரிட்டிஷ் அரும் பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல்  நூல் மூலதனம் . அதாவது கேபிட்டல்.
சமுதாயத்தின் இறந்த காலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு.
முதலாளிகளின் பலம் பெருகப் பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிரார்கள்.
பொறுத்தது போதும் என்று பொங்க்கியெழுந்து தொழிலாலர்கள்  ஒன்றுபட்டு முதலாளித்துவப் போக்கை மாற்ற வேண்டும்.
தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதுதான் அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து.
இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்குக்குக் காரணம் கார்ல் மார்க்ஸ்தான்.
மார்க்ஸின் பொதுவுடைமைக் கருத்துக்கள் உலகம் முழுதும் பரவி வலுப் பெறத் துவங்கின.
மார்க்ஸ் முன்னுரைத்ததைப் போலவே புரட்சிகள் வெடிக்கத் துவங்கின.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஆகஸ்ட் புரட்சி நடந்து லெனின் தலைமையில் பொதுவுடைமை ஆட்சி அதாவது கம்யூணிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக செக்கலோஸ்வாக்கியா, யூகோஸ்லாவியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பேனியா, சீனா, வடகொரியா, வியட்னாம், க்யூபா  போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.
உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது.
பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி தாங்கள் அனுபவித்த வேதனைகளையும் தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு (பெண் குரல்)
எங்கள் குட்டி தேவதை பிரென்சிஸ்கா மார்புச் சளியால் மூச்சுத் திணறி இறந்தாள்,
எங்க்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் பிறந்த போது தொட்டில் வாங்கக் கூட  எங்களிடம் காசு இல்லை.       இறந்த போது சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை.
(டைரிக் குறிப்பு நிறைவு)
மார்க்ஸ் என்ற மாமனிதனுக்குத் தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுனோய் ஏற்பட்டது.        
அவருக்கு மருந்து வாங்கக் கூட பணம் இன்றித் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த கார்ல் மார்க்ஸ்.ஜென்னியையும் மரணம் கொண்டு, போக, நிலை குலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
பாட்டாளிகளை அவர் அன்போடு காம்ரேட்ஸ் அதாவது தோழர்களே என்று அழைத்தார்.  இண்று கூட தொழிற்சங்கங்களில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவுடைமைக் கொள்கையில் அடிப்படையில் எந்தக் கோளாறும் கிடையாது. கம்யூணிசத்தின் இன்றைய நிலைக்கு அது நடைமுறைப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்க்கள் அல்ல.     அந்த நோக்கங்க்கள் உயரியவை. மார்க்ஸ் நினத்தது போலவே அது செயல்படுத்தப்பட்டிருந்தால், அதை விட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் சமதர்மக் கொள்கை என்ற தன் இலக்கிலிருந்து மாற்வே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன்.
அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான்.
ஆனால், இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்சுக்குத்தான் நன்றி சொல்கிறது வரலாறு.
மார்க்ஸின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.
துன்பமும் துயரமும் போட்டி போட்டுக் கொண்டு
நம்மைத் தாக்கினாலும் நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் தொய்வின்றித் தொடர வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.”
இப்படியாக அந்த ஆடியோ வீடியோ காட்சி நிறைவு பெறுகிறது.
இதைக் கேட்க விரும்புவோர் google இணைய தளத்தில்  karl marx biography in tamil என டைப் செய்து youtube ல் காணலாம். கேட்கலாம் எக்காலத்துக்கும் பொருந்தும் அந்த மாமனிதனின் வரலாற்றின் ஒரு பகுதியை.

Saturday 15 November 2014

கிருஷ்ணய்யர் 100

இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு நீதிபதி பணியாற்றி ஓய்வு பெற்றபின், தான் எந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்ந்து வழக்காடிகளுக்கு நீதி பரிபாலனம் செய்தாரோ, அதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, ஒரு வழக்காடியாக நிறுத்தப்பட்ட அரிய வரலாற்றுச் சம்பவம் 1981-ம் ஆண்டு நவம்பர் திங்களில் கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தேறியது.
கேரள உயர் நீதிமன்ற வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித் துறையை அவமதிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் விமர்சனம் செய்து பேசினார் என வழக்கறிஞர் வின்சென்ட் பனிகுலங்கரா என்பவர் நீதிமன்ற அவமதிப்புக்கான குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத் தலைமை வழக்குரைஞரின் அனுமதி பெற்று வழக்கு தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே அந்த உயர் நீதிமன்றத்தில் 1968-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர். அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தண்டிக்கவோ, எச்சரிக்கை செய்யவோ முன்வரவில்லை. மாறாக, இந்திய நீதித் துறையின் பெருமையையும் வலிமையையும் உலகம் உணரும் வகையில் தீர்ப்புகளை வழங்கியவர் ‘நீதித் துறையின் மனசாட்சி’, ‘நாட்டு மக்கள் நலன் விரும்பி’ எனப் பாராட்டு மொழிகளால் தனது தீர்ப்பில் புகழாரம் சூடி, மனுவைத் தள்ளுபடி செய்தது. ஓர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியே பின்னாளில் அந்நீதிமன்ற வழக்காடியான வரலாறு முன்னுதாரணம் இல்லாத, முன் தீர்ப்பாகச் சட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய நீதி பரிபாலன அமைப்பு முறையைக் கொண்டுள்ள இந்தியக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தை அலங்கரித்த நீதியரசர்களில் வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிடத்தக்கவர். ஏனெனில், 25 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி, புகழ்பெற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடி வாகை சூடிய அனுபவம், தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் மன்றத்தில் தலைச்சேரி தொகுதியில் வென்று, சென்னை மாகாண சட்டப் பேரவை, கேரள மாநில சட்டப் பேரவைகளில் உறுப்பினராக, மாநில சட்ட அமைச்சராக உயர்ந்த பொறுப்புகளை வகித்து சட்டமியற்றல், திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் எனப் பல்துறை அனுபவத்தையும் பெற்றவர். பின்னர், இந்தியச் சட்ட ஆணைய உறுப்பினராக இருந்ததால் சட்ட முன்வரைவுகள், அறிக்கைகள் தயாரித்தல் இவற்றில் தனிப் பெரும் பயிற்சியும் கிடைத்தது. சட்டப்புலமை, திட்ட மிடுதல், திறமையாக வாதிடுதல் இவற்றுடன் தனக்கே உரிய தலைமைப் பண்புகளுடன் வாழ்ந்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவர். இத்துடன் இளமையில் தடுப்புக் காவலில் ஒரு மாதச் சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதியரசர்களில் மாநில அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தவிர வேறு எவருக்கும் கிடைக்க வில்லை.
காந்தியச் சிந்தனைகளைப் பயின்று உள் வாங்கிய நீதிபதியான கிருஷ்ணய்யர், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் நோக்கில் தண்டனைகள் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில், சிறைச்சாலைகள் மனநல மருந்தகங் களாகச் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். இந்தியாவின் மிகப் பெரிய சிறையான திகார் சிறைச் சாலைக்குள் சென்று பார்வையிட்டு, அங்குள்ள சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கும் சிறைச் சாலை சீர்திருத்தங்களுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் பற்றிய திட்டமிடல் மேற்கொண்ட நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் முதன்மையானவர். கைதிகள் தங்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய கடிதங்களைத் தனக்கு அனுப்பிவைத்தால், அவற்றின் தன்மை அறிந்து அதனையே வழக்குக்கான மனுவாக ஏற்று, விசாரணை மேற்கொண்டு ‘கடித வழி நீதி நல்கும் முறை’யைத் தீவிரமாக அமல்படுத்தினார்.
ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாது காப்புக் காரணங்கள் எதுவுமில்லாத நிலையில், தேவை யின்றி இரும்புச் சங்கிலியைக் கையில் பூட்டி இழுத்துச் செல்வது மனித மாண்புகளுக்கு ஏற்றதல்ல என, கை விலங்கை உடைத்தெறியும் ஆற்றல் அவரது தீர்ப்புகளுக்கு இருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலக் குறுகிய பணிக் காலத்தில் 745 புகழ்மிக்க தீரப்புகளை வழங்கியுள்ளார். அதனை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர், குறுகிய காலத்தில் இத்தகைய சிறப்பான, மிகுதியான தீரப்புகளை அக்காலத்திலேயே வழங்கியவர் என கிருஷ்ணய்யரைப் பாராட்டுகின்றார். கணிப்பொறி, இணையதளத் தொடர்புகள் இல்லாத பணிச் சுழலில், ஒவ்வொரு தீரப்பிலும் உலக அறிஞர்களின் மேற்கொள்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதால், அவை படிப்பவர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாகத் தோன்றும்.
இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்காடும் முறையைச் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்து ஊக்குவித்த பெருமை கிருஷ்ணய்யருக்கு உண்டு. மத்தியப் பிரதேச மாநில ரத்லம் நகராட்சியின் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்த்து அந்நகர மக்கள் தாக்கல் செய்த வழக்கில் கிருஷ்ணய்யர் வழங்கிய அந்தத் தீர்ப்புதான் ‘நீதி நல்குவதில் மக்கள் பங்களிப்பை’ உறுதிசெய்த முதன்மையான தீர்ப்பு என சட்ட அறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
1980-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஓய்வின்றி மக்கள் நலப்பணிகளிலேயே ஈடுபட்டு வாழ்ந்துவரும் தியாகச் செம்மலான கிருஷ்ணய்யர், தனது வாழ்நாள் முழுவதையும் மனித உரிமைகள் பாதுகாப்பு, மது-புகையிலை ஒழிப்பு, ஏழை மக்களுக்காகக் குரல் கொடுப்பது போன்ற பணிகளுக்காகத் தனது ‘சத்கமயா’ வீட்டின் கதவு களைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் தனது ‘நினைவுகள் மறையுமுன்’ என்ற தன் வரலாற்றில் கூறியுள்ளதுபோல், உச்ச நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதி களில் ஒருவரான கிருஷ்ணய்யரின் பணிக்காலத்தை ‘கிருஷ்ணய்யர் காலம்’ என்றே அழைக்கலாம்.  இன்று அவருக்கு நூறாவது பிறந்த நாள். நீதிக்கு வணக்கம்.

இரங்கல்

மாநிலச் செயலர் பட்டாபியின்
அன்னை  மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கலைக் 
காணிக்கையாக்குகிறோம்.


Friday 14 November 2014

நேரு

நம் தேசத்தைக் கட்டமைத்த தலையாய தலைவர்களுள் ஒருவர் நேரு. இன்று 125-வது பிறந்த நாள். இந்தியாவும் உலகமும் மிக முக்கியமான, நெருக்கடியான கட்டத்தில் நிற்கும் தருணத்தில், நேரு மிகவும் தீவிரமாக நினைவு கூறப்பட வேண்டியவராகிறார்.
20-ம் நூற்றாண்டில் இந்தியா உலகுக்கு அளித்த மகத்தான அரசியல் தலைவராக நேருவைச் சொல்லலாம்.
நேரு உண்மையில் இந்தியத் தலைவராக மட்டுமல்ல, ஒரு உலகத் தலைவராகவே செயல்பட்டார். அதிகாரப் பசியின் மொழியில் உலகத் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அமைதியின் மொழியில் பேசினார் நேரு: “இன்றைய உலகத்தைப் பொறுத்தவரை, திட்டமிட்டு நிகழ்த்தப்படும் வன்முறையின் ஆயுதங்களை நாம் யாரும் தூக்கியெறியத் துணிய மாட்டோம்… உலக நாடுகளெல்லாம் தங்களுக்குள் ரத்த வெறி கொண்ட பார்வையை வீசுகின்றன என்று காந்தி ஒரு முறை சொன்னார். என்னால் முடிந்த வரை என்னுடைய கண்களைத் தெளிவாக வைத்துக்கொள்ளவே முயல்கிறேன்; ரத்த வெறியேறிய பார்வையால் தெளிவான சிந்தனையோ, தெளிவான செயல்பாடோ சாத்தியமாகாது.”
வேறுபட்ட இனங்கள் ஒன்றுசேர்ந்து சகவாழ்வு வாழ்வதுதான் ஒரு நாட்டின் அமைதிக்கும், ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும் அடிப்படை என்பதை நேரு அளவுக்கு நம்பியவரும் செயல்படுத்திக் காட்டியவரும் உலக அளவில் கிடையாது. ஒரு சமுதாயமோ நாடோ தனது சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே உலகம் அந்தச் சமுதாயத்தையோ நாட்டையோ மதிப்பிடும் என்பதை அறிந்தவர் நேரு. பாகிஸ்தான் தன்னுடைய சிறுபான்மை இனத்தவரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்காக, இந்தியாவை இந்து பாகிஸ்தானாக ஆக அனுமதிக்க முடியாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இந்தியாவுக்கு அதன் பன்மைத்தன்மை பெருமையாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக அல்ல என்பதுதான் நேருவின் ஆழமான நம்பிக்கை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்கும் நேரு காட்டிய வழி. இதற்காகத்தான் நேரு இன்று வலதுசாரிகளால் வெறுக்கப்படுகிறார்.
இந்தியாவை காந்தியின் விருப்பத்துக்கு மாறாக தொழில்மயத்தின் பாதையில் நேரு அழைத்துச்சென்றார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. நேருவின் நவீனத்துவத்துக்கு எத்தனையோ விமர்சகர்கள் உண்டு, காந்தியில் ஆரம்பித்து. ஆனால், இன்றைக்குப் பார்க்கும்போது அதுவும் காந்தியத்தின் மற்றுமொரு பரிமாணமாகவே தெரிகிறது. ஒட்டுமொத்த மாகச் சுரண்டப்பட்ட தேசம் விடுதலை அடையும் சூழலில், உலக நாடுகளோ நவீனத்துவத்தின் பாதையில் வெகு தூரம் கடந்துவிட்டிருந்தன. இந்தியாவின் அடிமட்டத்தில் இருந்த பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவு, சுகாதார வசதிகள் உட்பட அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமே கிடைக்கப்பெறாத நிலையில்தான் இருந்தார்கள். அவர் களுடைய வாழ்க்கை நிலையை மேலே எடுத்துச்செல்வதில் நவீனத் தொழில்நுட்ப யுகம் அளித்த சாத்தியங்களையே நேரு பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். தாராளமயவாத, உலகமயவாதக் காலத்து ஆட்சியாளர்களைப் போலல்லாமல், நவீன யுகத்தைச் சற்று சந்தேகக் கண்ணோடுதான் நேரு பார்த்தார். நவீன யுகத்தின் எல்லையை அவர் உணர்ந்திருந்தார் என்பதையே நேருவின் இந்தக் கூற்று நிரூபிக்கிறது: “இயந்திரங்களைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால், அவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட மனிதர்கள் போலவே ஆகிவிடுகின்றன. சிந்திக்கவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்கூட ஆரம்பித்திருக்கின்றன. இயந்திரங்கள் மனிதர்களாக ஆகும் அதே நேரத்தில், மனிதர்களெல்லாம் மேலும் மேலும் இயந்திரங்களாகிக் கொண்டிருக்கிறார்கள். மனித மனம் அதன் சிந்தனா சக்தியை இழந்து மேலும் மேலும் இயந்திரத்தைப் போலவே ஆகிவிடும். அதுதான் மனித குலத்தின் மாபெரும் சோகம்.”
மனிதம் காக்கப்பட வேண்டும்.
நாட்டின் பன்முகத்தன்மை
காக்கப்பட வேண்டும்.
மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும்.
பொதுத் துறைகள் காக்கப்பட வேண்டும்.

இதுவே  நேருவுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

Wednesday 12 November 2014

தகர்க்கப்படும் கதவுகள்

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களை விற்பது தொடர்பாக அரசு திறந்த மனத்துடன் இருக்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.
அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதும் அதற்காக இலக்கு நிர்ணயிப்பதும் கடந்த 10 ஆண்டுகளாகச் சடங்காகிவிட்டது. அரசு நிர்ணயிக்கும் இலக்கை எட்ட முடியாமல், ஆண்டுதோறும் தோல்வியே ஏற்படுகிறது. அப்படியும் மனம் தளராத விக்கிரமாதித்யர்களாக அதே முயற்சியில் அரசுகள் ஈடுபடுகின்றன. நஷ்டம் அடையும் நிறுவனங்களை விற்பதையாவது புரிந்துகொள்ள முடிகிறது, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளையும் விற்கத் துடிப்பது ஏன்?
நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, மின் உற்பத்தி, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், ராணுவத் துக்கான தேவைகள், சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாய ஆராய்ச்சி, மருந்து மாத்திரை தயாரிப்பு போன்ற துறைகளில் தனியாரின் பங்களிப்பு பெருமளவுக்கு இருக்க முடியாது என்பதாலும், நாட்டை வளப்படுத்த இவை அவசியம் என்பதாலும்தான் இந்தத் துறைகளில் அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இவற்றை இனி தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அளவுக்கு நிலைமை மாறி விடவில்லை. சொல்லப்போனால், தனியார் துறையும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை.
இந்தியத் தனியார் துறையால் அதிக முதலீட்டைத் திரட்ட முடியவில்லை, நவீனத் தொழில்நுட்பத்தைப் பெற முடியவில்லை என்பதால்தான் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். கார், ஸ்கூட்டர் முதலிய வாகனங்களின் தயாரிப்பில்கூட அந்நிய நிறுவனங்கள்தான் கொடிகட்டிப் பறக்கின்றன.
அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதிலும் தில்லு முல்லுகள் நடந்திருப்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து, அடிமாட்டு விலைக்கு விற்றதெல்லாம் அம்பலமாகியிருக்கிறது. தனியார் சிலர் சிண்டிகேட்டாகக் கூட்டு சேர்ந்து, மிகக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய வரலாறும் நமக்கிருக்கிறது.
அரசுத் துறை நிறுவனங்கள் என்பவை வெறும் இயந்திரங்கள், கட்டிடங்கள், மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு மட்டுமல்ல. உயிருள்ள உற்பத்திக் காரணிகளான தொழிலாளர்களையும் கொண்டவை. அரசு நிறுவனங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் கட்டிடம், இயந்திரம் என்று எல்லாவற்றையும் பிரித்து விற்றுவிட்டு, நிலத்தை கோடிக் கணக்கான ரூபாய் லாபத்துக்கு ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் விற்பதில்தான் போய் முடியும்.
தொழில்துறையில் அரசுக்கு வேலையில்லை என்று பிரதமர் மோடி கருதுவது ஒருசில துறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்குப் பொருந்தவே பொருந்தாது. அரசுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் நடைபெறக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதில் அக்கறை செலுத்த வேண்டும்.
விற்பனை ஒரு தீர்வாகாது. தனியார் துறையிலும் நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் இல்லை. வங்கிகளுக்கு 500 தனியார் நிறு வனங்கள் செலுத்த வேண்டிய வாராக்கடன் அளவு மட்டுமே 2014 மார்ச் மாதக் கணக்குப்படி 28 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பதிலிருந்து இதை உணரலாம்.

காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தனியார்மயத்துக்காகக் கதவுகளைத் திறந்துவிட்டன என்றால், பாஜக அரசு கதவுகளைத் தகர்த்துக்கொண்டிருக்கிறது. கதவுகளைத் தகர்ப்பதென்பது இறுதியில் வீட்டைத் தகர்ப்பதில்தானே போய் முடியும்!

Tuesday 11 November 2014

வாழ்த்துக்கள்

12.11.2014 அன்று வங்க்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு நாள்
வேலை நிறுத்தப் போராட்டம்.
உடன்பாட்டின் படி
01.01.2012 முதல் சம்பள மாற்றம் செய்யப்பட  வேண்டும.

இதற்காக 15 முறை வங்கி  நிர்வாகத்துடனும்
அரசுடனும் பேச்சு வார்த்தை  நடைபெற்றுள்ளது.
அதிகாரிகளும்  ஊழ்யர்களும் 10 முறை    வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

போரட்டம்
வெல்லட்டும்.
கோரிக்கைகள்
திருப்திகரமான தீர்வினை
எட்டட்டுமம்  என வாழ்த்துகிறோம்

Thursday 6 November 2014

விற்று விடலாம்!

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் இந்தியத் தொழிலக கூட்டமைப்பு புதன்கிழமை (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்றால் அது சிறப்பாக செயல்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
சில பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயம் மூட வேண்டிய சூழலில் உள்ளன. இதனால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழப்பார்கள். இதே நிலையில் அவர்கள் தொடர அனுமதிப்பதா அல்லது அத்தகைய நிறு வனங்களை தனியாரிடம் அளிப்பதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டி வேலையில் தொடரும் நிலையை உருவாக்குவதா என்று நினைக்க வேண்டும். இப்படி பார்க்கும்போது தனியாரிடம் அளித்து பணியில் தொடர்வதுதான் சிறந்த முடிவாக ஊழியர்களுக்கு இருக்க முடியும் என்றார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறு வனங்கள் அரசின் தயவில் வெறு மனே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. நீண்ட கால நோக்கில் இது சரியான நடவடிக்கையாக இருக்காது. வரி செலுத்தும் மக்களின் பணம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு தொடர்ந்து செல்வதை மக்கள் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மொத்தம் 79 பொதுத்துறை நிறு வனங்கள் நஷ்டத்தில் செயல்படு கின்றன. இத்தகைய நிறுவனங்களில் அரசின் முதலீடு ரூ. 1.57 லட்சம் கோடி முடங்கியுள்ளது. மேலும் இத்தகைய நிறுவனங்களின் செயல்பாட்டுக்கென பட்ஜெட்டில் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டது. இத்தொகை வெறுமனே ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கத்தான் பயன்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 43,425 கோடியைத் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் ஜேட்லி கூறினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுத் துறை நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்டி ப்திய பாரதம் படைப்போம் என்றார்கள். ஆட்சிக்கும் வந்தார்கள்.
பாவம் இவ்வளவு தூரம் சிந்திப்பதை விட இந்த நாட்டையே உள்நாட்டு முதலாளிகளுக்கோ அல்லது வெளி நாட்டு முதலாளிகளுக்கோ விற்று விடலாமே?

இந்திய அரசியல்வாதிகள் ஆள்வதற்கு வக்கில்லாமல் நாட்டை விற்று விட்டார்கள்  என்ற வரலாற்றை வரும் சந்ததி படித்துத் தொலையட்டும். இந்தியாவை இப்படியும் தூய்மைப்படுத்தலாமோ? 

Tuesday 4 November 2014

உயிரைக் கொடுத்து

கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து கூடலூ ருக்கு அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை நிறுத்தி, 60-க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றியுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (48), கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு சுல்தான் பத்தேரியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை என்ற பகுதியில் அப்துல் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரைக் கண்ட சில பயணிகள் சத்தமிட்டுள்ளனர். இருப்பினும் தனது கட்டுப்பாட்டில் இருந்து வாகனம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தியுள்ளார்.
பேருந்து நின்றதும், பயணி கள் அப்துல் ரகுமானை நெலாக் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து ஓட்டுநரின் உடல், சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை நேரம் என்பதால் பேருந்தில் 60-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர். சிறிது முன்னதாக பேருந்து சென்றிருந்தால், சாலையோ ரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும்.

தனது கடைசி நேரத்திலும் பயணிகள் பாதுகாப்பு கருதி பேருந்தை நிறுத்தியதால், நாங்கள் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினோம் என பயணிகள் தெரிவித்தனர்.

Saturday 1 November 2014

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா, இந்தியாவா?



உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?
நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.
2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியா நிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு, இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் 1 முதல் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பும், அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும், இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.
விற்பது - இணைப்பது புதிதல்ல
நோக்கியாவைப் பொறுத்த அளவில் தனது நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துடன் இணைப்பது புதிதல்ல. ஏற்கெனவே, செல்பேசித் தயாரிப்புக்குள் வருவதற்கு முன், ஃபின்னிஷ் ரப்பர் ஒர்க்ஸ் மற்றும் ஃபின்னிஷ் கேபிள் ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறு வனங்களுடன் இணைந்த வரலாறு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்திருக்கிறது. காகிதம், ரப்பர், கேபிள், மின்சாரம், மின்னணுச் சாதனங்கள் என ஐந்து தொழில்களில் ஈடுபட்டுவந்த நோக்கியா, பல்வேறு இணைப்புகளையும் விற்பனைகளையும் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறது. செல்பேசி தயாரிப்புக்குப் பின்னரே, குறிப்பாக 1994-க்குப் பின், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக நோக்கியா மாறியது.
ஜி.எஸ்.எம். என்ற இரண்டாம் தலைமுறை செல்பேசிக்கான ஒழுங்குமுறையையும், சி.டி.எம்.ஏ. என்ற மூன்றாம் தலைமுறை ஒழுங்குமுறையையும் மிக சாமர்த்தியமாகக் கையாண்டு, சந்தையில் தங்கள் செல்பேசி விற்பனையை மேம்படுத்திக்கொண்ட  அனுபவம், மற்ற செல்பேசி நிறுவனங்களை விடவும், நோக்கியாவுக்குத்தான் அதிகம். சி.டி.எம்.ஏ. ஒழுங்கு முறை என்ற 3ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நோக்கியா அறிமுகப்படுத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியிருந்தது.
ஒரு செல்பேசியைத் தயாரிப்பதற்கு, 300-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தேவை. இவை சரியான நேரத்தில் கிடைப்பதும், அதற்கான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்களுடன் உடன்பாடு கொண்டு செயல்படுவதும் தவறில்லை என்று நோக்கியா தலைமை முடிவெடுத்து, வேலைகளைப் பிரித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப், லைட் ஆன் மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பி.ஒய்.டி, ஃபிலெக்ஸ்ட்ரானிக்ஸ், ஆர்.ஆர்.டோனல்லி ஆகியவை அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டுவருகின்றன.
நோக்கியா பல உதிரி பாகங்களை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பிரதான வடிவமைப்பைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு, பாகங்களை ஒன்று சேர்க்கும் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத் தியது. நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பரந்ததாக இருந்த நிலையில், தனது தயாரிப்புப் பெயரைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், சிக்கனத்தைக் கையாளவும், மேற்குறிப்பிட்ட உற்பத்தி முறையில் தீவிரமாகச் செயல்பட்டது. இது மிகப் பெரிய பலனையும் நோக்கியாவுக்கு அளித்தது.
இந்தியாவில் முதலீடும் வருவாயும்
செல்பேசி விற்பனையில், இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற் பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005, ஏப்ரல் மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடக்கத்தில் ரூ. 675 கோடியும், பின்னர் அடுத்த கட்டத்தில், சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்து, ஏக்கர் ஒன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும், பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணை தெரிவிக்கிறது. இதற்கு மேல், வணிக வரி, விற்பனை வரி ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.
மென்பொருள் இறக்குமதி, அதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசு, வாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்து, முடிவாகாமல் உள்ளது.
இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட், நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்துவிட்டதால், நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமை, ஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால், இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையதுஎன்று வரும் நகைச்சுவையைப் போல், நோக்கியா செல்பேசி விற்பனையாகும்; ஆனால், நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.
கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்
இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையை, மைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவே, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று 5,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு, ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும், பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் 8 மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது, அவர்களின் எதிர்காலம், குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, தன் மக்களை இப்படியா கைவிடுவது?