NFTECHQ

Thursday 30 April 2015

மே தின வாழ்த்துக்கள்

உழைப்பவர்  உரிமைக்காகவும்,
நலனுக்காகவும்  உதிரம் சிந்தி
உயிரை இழந்த உன்னத்த் தியாகிகளை நன்றியுடன் வணங்குவோம்.
உழைக்கும் மக்களுக்காக உழைத்திடும் தலைவர்களின் மீது தாக்குதல் நடப்பதும், அவர்கள் மீது அவதூறான புகார்கள் தருவதும்
இன்றும் தொடர்கிறது.
உரிமைகள் அனைத்தும்
தியாகத்தால் வந்தது என்பதை மறந்து விட்டு  செயல்படுவோர் திருந்த வேண்டும்.
இல்லையேல் வரலாறு அவர்களைத் தண்டிக்கும். பெற்ற உரினைகளைப் பேணிக்  காக்க தொடர்ந்து
போராட வேண்டிய காலச்சூழலில்
உள்ளோம் என்பதை உணர்வதும், உணர்த்த வேண்டிய அவசியமும் உள்ளது.
இந்த மேதினத்தில் அந்தச் சபத்த்தை ஏற்போம்.

அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.

Sunday 26 April 2015

மதியின் உரையாடல்

நமது ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் குறித்து தோழர் மதிவாணன் அவர்கள் இன்று 26.04.2015 இரவு 9 மணிக்கு ஜெயா தொலைகாட்சிஉரையாடலில் பங்கு பெறுகிறார். 

இயற்கையின் தாக்குதல்

நேபாளத்திலும்,இந்தியாவிலும் நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்துள்ளனர். நாம் இயற்கைக்கு விளைத்த இன்னலின் விளைவாக இயற்கை கோரத்தாண்டவம் ஆடுகிறது.
உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இனியாகிலும் மக்களும் ஆளும் அரசுகளும் இயற்கையைத் துன்பத்துக்கு ஆளாக்காமல் இருப்பதே மனித குலத்தைக் காக்கும்.

நேபாளத்தில் ஒரு ஆலயத்தில் குரங்குகள் ஆபத்தை முங்கூட்டியே உணர்ந்து வேகமாக ஓடியதை க் கண்டு மக்கள் ஆலயத்தை விட்டு வெளியேறி உயிர் பிழைத்துள்ளனர். இது ஏதோ ஒரு பாடத்தை மக்களுக்கு உணர்த்துகிறதோ? 

Saturday 25 April 2015

இந்தியா இந்தியா


தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த பீல்டருமான ஜான்ட்டி ரோட்ஸ்-மெலானி தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜாண்டி ரோட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலானிக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் வசதிகள் குறைவு என்ற காரணத்தினால் மும்பை மருத்துவமனையில் மனைவியை அனுமதித்திருந்தார்

************************************************
இந்தியாவின் பெயரை 'பாரதா' என மாற்ற வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பத்வால் உச்ச நீதிமன்றதில் பொது நல மனு தாக்கல்.

Thursday 23 April 2015

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்
லேன்ட்லைன்
சேவை
கு றித்த் செய்தி

கண்டிக்கிறோம்



தோழர் மதிவாண்ன் அவர்களை போராட்டத்தில் பங்கேற்காத ஒரு ஊழியர் 22.04.2015 அன்று கத்தியால் தாக்கியிருக்கிறார். காட்டுமிராண்டித்தனமான
இச்செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி- வாழ்த்துக்கள்

இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
27.04.2015 அன்று தொலைத்தொடர்புத்துறையின் செயலாளர் நமது தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது போராட்டம் வீண் போகாது.
நிச்சயம் போராட்டம் பலன் தரும் என நம்புகிறோம். தலைவர்கள் அறிவித்தபடி நமது கடமையைச் செய்து விட்டோம். இனி அவர்கள் கடமையைச் செய்வார்கள்.

Monday 20 April 2015

ஒரு செய்தி

துவக்குவோம்



20.04.2015 மாலை 4 மணி


இன்று  டெல்லியில் நடைபெற்ற கூட்டுப் போராட்டக் குழுவின் கூட்டத்தில்  வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
வெற்றிகரமாக நடத்திடுவோம்.

நாமன்றி வேறு யார்?

ஏப்ரல் 21,22  இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்.
நாம் பணி புரியும் நமது துறைக்காக, அதன் வளர்ச்சிக்காக, அது வளரும் போது நாமும் கூடுதல் நலன் பெறுவதற்காக நடைபெறும் போராட்டம். நமது துறையைப் பாதுகாத்து அதை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கடமையிலிருந்து நிர்வாகமும் மத்திய அரசும் தவறுகின்ற போது போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
மேலும் நமக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
எனவே அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இனி வரும் காலம் இனிதாக அமைய இந்த் வேலைநிறுத்தத்தில்  பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Thursday 16 April 2015

கடமை




ஏப்ரல் 21, 22 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது நமது கடமை.
இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதே நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
 இதை உணர்வோம்.
பங்கேற்போம்.

Tuesday 14 April 2015

அம்பேத்கரின் உலகத்துக்குள்

இன்று அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள்
அம்பேத்கரின் படைப்புகள் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக மகாராஷ்டிர அரசால் வெளியிடப் பட்டுள்ளன. மத்திய அரசு அமைத்துள்ள அம்பேத்கர் பவுண்டேஷன் அவரது படைப்புகளை இந்தி, மலையாளம், தமிழ், உருது, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 9 மொழிகளில் இதுவரை மொழியாக்கம் செய்துவருகிறது என்று மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தின் 18 தொகுதிகள் மற்ற மொழிகளில் 40 தொகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் 38 தொகுதிகள் வரை வெளியாகியுள்ளன. மற்ற மொழிகளில் ஒருசில தொகுதிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆங்கில மொழியில் வெளியான படைப்புகள் போக மராத்தி மொழியிலும் பல படைப்புகள் இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வ.கீதா.
அவரது படைப்புகளிலேயே இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக சாதி அழித்தொழிப்பு எனும் நூல் உள்ளது. இந்தப் புத்தகத்துக்குத் தமிழில் ஓரிரு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. புத்தரும் தம்மமும் எனும் அம்பேத்கரின் நூலைப் பேராசிரியர் பெரியார்தாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.
தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர்: லைஃப் அண்டு மிஷன் என்ற புத்தகம் அம்பேத்கரின் ஒப்புதலோடு வெளியான அவரது வாழ்க்கை வரலாறு. கம்யூனிச இயக்கத் தலைவரான ஏ.எஸ்.கே. ஐயங்கார் என்பவர் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரச்சினைகளும் எனும் நூலை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது. அம்பேத்கரின் வழித்தடத்தில் வரலாற்று நினைவுகள் எனும் நூலை அம்பேத்கருக்குச் செயலாளராக இருந்த பகவான்தாஸ் எழுதியுள்ளார். அதனை இந்திரா காந்தி அலங்காரம் மொழியாக்கம் செய்துள்ளார்.
பிற...
மத்திய அரசின் சார்பாக எடுக்கப்பட்ட டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அது தமிழிலும் வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் வாழ்க்கையை ஒட்டியும் தலித் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பற்றியும் ஆனந்த பட்வர்தன் எடுத்த மிக முக்கியமான ஆவணப்படம்தான் ஜெய் பீம் காம்ரேடு.
அம்பேத்கரின் படைப்புகளையும் அம்பேத்கர் தொடர்பான விவாதங்களையும் அறிந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம்.

Thursday 9 April 2015

ஜெயகாந்தம் மறைந்த்து









ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தார்

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!
ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.
இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.
மனிதநேய ஆன்மிகம் பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், ‘யாருக்காக அழுதான்' சோசப்பும், ‘பிரளயம்அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.
எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதிஎன்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.
“45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?” அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்
று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.
சிற்பி கூறியதுபோல, ‘தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்

இசைமுரசு



இசைமுரசு

நாகூர் ஹனிபா மறைவு





பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார். இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.
கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

Tuesday 7 April 2015

மருத்துவமனை அங்கீகாரம்



ஈரோடு மாவட்டத்தில் 01.04.2015 முதல் கீழ்க்கண்ட மருத்துவமனைகள் நமது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது

1அச்சுதா கண் மருத்துவமனை ஈரோடு
2. அகர்வால் கண் மருத்துவமனை ஈரோடு
3. அரசன் கண் மருத்துவமனை
ஈரோடு
4. எல்.வி.எஸ் கண் மருத்துவமனை
ஈரோடு
5. வாசன் கண் மருத்துவமனை
ஈரோடு
6.செந்தில் பல்னோக்கு மருத்துவமனை ஈரோடு
7. மாருதி மெடிக்கல் செண்டர் ஈரோடு
8.சுதா மருத்துவமனை ஈரோடு
9. உதயம் மருத்துவமனை சத்தியமங்கலம்

Friday 3 April 2015

மனிதநேயம்

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற முஸ்லிம் சிறுமி

பகவத் கீதை தொடர்பான போட்டி ஒன்றில், 12 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் முதல் பரிசு வென்றுள்ளார்.
மும்பை மீரா ரோடில் உள்ளது காஸ்மோபோலிடன் உயர்நிலைப் பள்ளி. இங்கு 6ம் வகுப்பு படித்து வருகிறார் மரியம் ஆசிப் சித்திகி எனும் சிறுமி. சமீபத்தில் மும்பையில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான பகவத் கீதை போட்டி நடைபெற்றது.
'
ஸ்ரீமத் பகவத் கீதா சாம்பியன் லீக்' எனும் தலைப்பில் இஸ்கான் சர்வதேச சங்கம் நடத்திய இந்தப் போட்டியில், 105 தனியார் பள்ளிகள் மற்றும் 90 நகராட்சிப் பள்ளிகள் என‌ 195 பள்ளிகளைச் சேர்ந்த 4,500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டிக்குத் தயார் செய்வதற்காக‌ பகவத் கீதை ஆங்கிலப் பதிப்புப் புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகளை விளக்கிக் கூற தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஒரு மாத கால தயாரிப்புக்குப் பிறகு, பகவத் கீதை கற்பிக்கும் பாடங்கள் குறித்த அந்தப் போட்டியில் அது தொடர்பாக 100 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் சரியான பதில் அளித்து மரியம் முதல் பரிசை வென்றுள்ளார்.
இதுகுறித்து மரியம் கூறும்போது, "பகவத் கீதையின் வழியே நான் கற்றுக்கொண்டது என்னவெனில், உலகில் மிகப்பெரிய மதம் என்பது மனிதநேயம் மட்டும்தான்" என்றார்.
தனது மகள் பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு வென்றது குறித்து மரியத்தின் தந்தை ஆசிப் கூறும்போது, "என்னுடைய மகள் வேறு ஒரு மதத்தின் புத்தகத்தைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறாள் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உலகில் உள்ள அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் என் குழந்தைகளுக்குச் சொல்லி வருகிறேன்" என்றார்.