NFTECHQ

Thursday 9 April 2015

ஜெயகாந்தம் மறைந்த்து









ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தார்

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!
ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.
இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.
மனிதநேய ஆன்மிகம் பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், ‘யாருக்காக அழுதான்' சோசப்பும், ‘பிரளயம்அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.
எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதிஎன்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.
“45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?” அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்
று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.
சிற்பி கூறியதுபோல, ‘தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்

No comments:

Post a Comment