NFTECHQ

Tuesday 16 June 2015

37788

துடிப்பான ஜனநாயகத்துக்கான இரு முக்கியமான அங்கங்களாகப் பார்க்கப்படும் தலைமைத் தகவல் ஆணையம், தலைமைக் கண்காணிப்பு ஆணையம் இரண்டின் தலைமைப் பொறுப்புக்கும் ஆட்களை நியமிக்க 10 மாதங்களுக்கும் மேல் ஆகியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? மத்திய அரசின் தலைமைத் தகவல் ஆணையராக விஜய் சர்மா, தலைமைக் கண்காணிப்பு ஆணையராக கே.வி. சவுதரி இருவரும் நியமிக்கப்பட்டிருப்பதை வைத்து, அரசின் உண்மையான நோக்கங்களை ஆய்வுக்குள்ளாக்குவதா, இப்போதாவது நியமிக்கப்பட்டார்களே என்று ஆறுதல் அடைவதா?
அடிப்படையில் இந்த இரு பதவிகளுமே ஊழலுக்கு எதிரான சூழலை உருவாக்குவதிலும் வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதிலும் முக்கியமான பங்கு வகிக்கக் கூடியவை. அரசு நிர்வாகத்தில் யார் என்ன செய்கிறார்கள், எதற்குச் செய்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மக்களும், மக்கள் நலத் தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும் அரசின் கொள்கை, செயல், திட்டம், நடைமுறைகுறித்துத் தெரிந்துகொள்ளவும் தவறுகள் ஏற்படின் எச்சரிக்கவும் இந்தச் சட்டம் பயன்படுகிறது. அரசின் எல்லா அங்கங்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவை என்ற அடிப்படையில் தலைமைத் தகவல் ஆணையர் பதவி முக்கியமானது. தலைமைக் கண்காணிப்பு ஆணையர் என்பவர் ஊழலைத் தடுப்பதற்கும், ஊழல் நேராமல் கண்காணிப்பதற்கும் உரிமை பெற்ற அதிகாரி. ஊழலுக்கு எதிரானவராகவும் சிவப்பு நாடா முறைக்கு எதிரானவராகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பிரதமர்  நியமித்திருந்தால், அவருடைய வார்த்தைகளோடு நெருக்கமானவராக அவரைக் காட்டியிருக்கும். ஆனால், மிக நீண்ட தாமதம் நியமனத்தில் நிலவியது. எந்த அளவுக்கு என்றால், அந்த அமைப்பே நிலைகுலைந்துபோகும் அளவுக்கு.

தலைமைக் கண்காணிப்பு ஆணையர் பதவிக்காவது உச்ச நீதிமன்றம் அனுமதிக்குப் பிறகுதான் உரியவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தொடங்கியது. அதன் தேர்வு நடைமுறைகளில் சில சிக்கல்கள் இருந்தன எனும் விஷயங்களையெல்லாம் ஓரளவுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்? பிரதமர் அலுவலகம், பணியாளர் நலத்துறை, மத்தியக் கண்காணிப்பு ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், முக்கியமான இதர முக்கிய மத்திய அமைச்சகங்கள் தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்ட அமைப்பு இது. ஆக, அங்கே ஆள் இல்லை என்றால், பிரதமர் அலுவலகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதில் வெளியே வருவதில் சிக்கல் உண்டாகும். அரசோ ஆள் இல்லாமல் நீண்ட காலத்துக்கு வைத்திருக்கிறது. இதனிடையே இன்னொரு காரியமும் நடக்கிறது. தலைமைத் தகவல் ஆணையரின் நிதி சுயாதிகாரத்தைப் பறிக்கும் உத்தரவைப் பிரதமர் அலுவலகம் எடுக்கிறது. அந்த அதிகாரம் அரசு நியமிக்கும் செயலரிடம் தரப்படுகிறது. இன்றைக்கு 37,788 கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது?

No comments:

Post a Comment