NFTECHQ

Friday 24 July 2015

இன்று அன்று 1991 ஜூலை 24: உலகமயமானது இந்தியா!



உணவு, உடை கலாச்சாரத்தில் புதிய போக்கு, நகர உள்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், வானுக்கும் பூமிக்குமாக எழும்பி நிற்கும் புதிய பாணிக் கட்டிடங்கள், புதிய கல்வித் திட்டங்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்று கடந்த 24 ஆண்டுகளில் இந்தியாவின் முகம் ஏகத்தும் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது ‘உலகமயமாதல்’ கொள்கைதான்.
படுமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில், நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த மிகப் பெரிய முடிவு அது. அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், 1991 ஜூலை 24-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான முடிவை அறிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். சோவியத் ஒன்றியம் உடைந்து 15 நாடுகளாகச் சிதறிப்போன காலகட்டம் அது. 1960-கள் தொடங்கி, சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்துவந்த இந்தியா, பொருளாதாரரீதியாகப் பலமிழந்து நின்றது. அதுவரை இராக் மற்றும் குவைத்திடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்தது இந்தியா. ஆனால், 1991-ல் இராக்கின் மீது அமெரிக்கா நடத்திய வளைகுடாப் போரால் கச்சா எண்ணெயின் விலையும் கணிசமாக உயர்ந்தது. இந்தப் பிரச்சினைகளால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் கடன் கேட்டு மன்றாடும் நிலை இந்தியாவுக்கு உண்டானது. பொருளாதாரச் சிக்கலில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கிப்போவதைத் தடுக்க, சுவிட்சர்லாந்திடம் 20 டன் தங்கம் அடகு வைக்கப்பட்டது. லண்டனுக்குக் கப்பல் வழியாக 47 டன் தங்கம் அனுப்பப்பட்டது. சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சந்திரசேகருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் அமர்ந்த நரசிம்ம ராவ் தலையில் இந்தப் பெரும் பொறுப்பு விழுந்தது. இந்த நிலையில்தான் அந்நிய முதலீட்டுக்கு இந்தியாவின் வர்த்தகக் கதவுகளைத் திறந்து வைத்தார் மன்மோகன் சிங். “பொருளாதாரத்தில் உலகின் பலம் மிகுந்த நாடாக இந்தியா எழுந்து நிற்கப்போகிறது” என்று அவர் உறுதியளித்தார்.
அன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் மற்றும் தொழில்துறை திட்டம் இந்தியாவின் பெரும்பாலான தொழில்துறைகளில் தனியார் முதலீடு செய்யுமாறு அழைப்புவிடுத்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் கால்பதித்தனர். இதனால், 1991-ல் 120 கோடி டாலர்களாக இருந்த இந்திய அந்நியச் செலாவணி இருப்பு, 6 ஜூன் 2014-ல் 31,300 கோடி டாலர்களாக உயர்ந்தது. அதே சமயம், பொதுத்துறை முதலீடு குறைக்கப்பட்டது, மக்களுக்கு வழங்கப்பட்ட பல மானியங்கள் குறைக்கப்பட்டன. இனி ‘வறுமைக் கோட்டுக் கீழ்’ என்ற வார்த்தையே இருக்காது என்றனர். ஆனால், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகும் நிலையை உலகமயமாதல் தோற்றுவித்தது வேறு கதை!

நன்றி இந்து தமிழ் 24.07.2015

No comments:

Post a Comment