NFTECHQ

Saturday 4 July 2015

கக்கன்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). தந்தை, கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.
ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.
1957-ல் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை களின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத் துறை அமைச் சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.
மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.
அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.
இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.
1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்திய அரசு இவர் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின் சின்னமாகவும், பொதுவாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார்.

No comments:

Post a Comment