NFTECHQ

Tuesday 28 July 2015

கடல்-மண்-வானம்-மலை


கடலோரம் பிறந்து,
மண்ணை நேசித்து,
வானை ஆராய்ந்து,
மலையில் நிரந்தர
உறக்கத்தில் ஆழ்ந்தார்
அப்துல் கலாம்.
எல்லோரையும் நேசித்தவர்.
எல்லோராலும் நேசிக்கப்பட்டவர்.
இந்தியாவின் தென்கோடியாம்
இராமேஸ்வரத்தில்
முதல் மூச்சை விட்டு ,
வடகோடியாம்
ஷில்லாங்க்கில்
பேசிக்கொண்டே
கடைசி மூச்சை விட்டவர்.
ஆற்றலும், அடக்கமும்
ஒருங்கே அமையப் பெற்று எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த அபூர்வ மனிதர்.
மக்களின் குடியரசுத்தலைவராக பணியாற்றியவர்.
இளமையில் வறுமையோடும்,
நடுத்தர வயதில் விண்ணோடும்,
முதுமையில் இளையவரோடும் வாழ்ந்தவர்.
நேர்மறைச் சிந்தனையை மட்டுமே தன் உள்ளத்தில் கொண்டவர்.
தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்று கொண்டவர். அதன் புகழை உலகெங்கும் சொல்லியவர்.
திருச்சி புனிதவளனார் கல்லூரியில்
சம்பத்குமார்,
அப்துல்கலாம்,
அலெக்சாண்டர்
ஆகிய மூன்று பேரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி படித்தனர்.
கீதையையும் பைபிளையும் நேசித்தவர்- வாசித்தவர்.
நல்லரசும்-வல்லரசும் உள்ள நாடாக இந்தியா அமைய வேண்டும் என கனவு கண்டவர்.
அக்னிச் சிறகை எழுதி தனது மனச் சிறகால் விண்வெளியை வலம் வந்தவர்.
மதம், ஜாதி, இனம், மொழி கடந்து அவரது நிரந்தரத்துயிலுக்காக அனைவரும் கண்ணீர் விடுகின்றனர்.
ஓயாது உழைத்தவர்
அமைதியாக உறங்கட்டும்.

அவர் கண்ட கனவுகளில் சிலவேனும் நனவாக நாம் உழைப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.


No comments:

Post a Comment