NFTECHQ

Thursday 22 September 2016

தொழிலாளர்களை நீக்கி ரோபோக்களை நியமிக்கும் இந்திய நிறுவனம்!

ரோபோக்கள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ரோபோக்களின் வருகையால் பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி பெருகுவதுடன் செலவும் குறைகிறது. ரோபோக்கள் மூலம் தரமும் பாதுகாக்கப்படுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் ரோபோக்களையே பயன்படுத்த முன்வந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது உற்பத்தி மையங்களில் அடுத்த மூன்று வருடத்தில் ரோபோக்களை நியமித்து 10,000 தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்ஜய் பெல் கூறுகையில்,"ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பணியில் ஈடுபடுத்த இருக்கிறோம். ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் 16 உற்பத்தி ஆலைகளில் மொத்தம் 30,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு ஆலையில் கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவதால் 20,000 தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவர். ஒரு ரோபோட் 100 தொழிலாளர்களின் வேலையைச் செய்யும். இது சீனாவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தியாவிலும் இது நடக்கும்" என்றார்.
இந்தியா பெருநிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தித் துறைகளில் மெதுவாகத் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் 10 சதவிகிதம் வரை வேலையின்மை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்தியாவில் ஐடி மற்றும் உற்பத்தித் துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் சில ஆண்டுகளில் 6.4 லட்சம் தொழிலாளர்கள் வரை வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் அச்சுறுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ரேமண்ட்ஸ் நிறுவனத்தை போல பல நிறுவனங்கள் ரோபோக்களை இந்தியாவில் பணியில் ஈடுபடுத்த தொடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?


நன்றி தோழர் காமராஜ் திருச்சி

No comments:

Post a Comment