NFTECHQ

Monday 31 October 2016

வரலாற்றை எழுதும்

இடத்தில் இந்திரா

இந்திராகாந்தி சுதந்திரப்போராட்ட பின்னணியில் வளர்ந்தவர். அவர் இல்லமான ஆனந்த பவனம் விடுதலை வேள்வியின் மையமாக இருந்தது.காந்தி,மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, படேல், அபுல்கலாம் ஆசாத்,எல்லைக்காந்தி, சுபாஷ் ,ஆச்சார்ய கிருபாளினி, சரோஜினி நாயுடு என்று மாபெரும் தலைவர்கள் அந்த வீட்டில் சுதந்தரப் போராட்டத்திற்கான கனலை ஊதி வளர்த்தபோது அந்தக் கனலில் வளர்ந்தது இந்திராவின் வாழ்க்கை. அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தின் போது செல்வச் செழிப்பு மிகுந்த ஆனந்த பவனத்தை அலங்கரித்த விலைமதிப்பற்ற வெளிநாட்டுப் பொருட்கள் நேரு குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டன.சிறுமி இந்திராவின் கையில் ஒரு வெளிநாட்டுப் பொம்மை இருந்தது. தனிமையில் வளர்ந்த இந்திரா அதை மிகவும் நேசித்தார். அவரால் அதைப் பிரியவே முடியவில்லை.இறுதியில் இதயம் கனக்க கண்ணில் நீரோடு அந்தப் பொம்மையைத் தீயில் எரித்தார். பிறகு அந்தத் தியாகம் தொடர்ந்து ஒரு நாள் இந்த தேசத்திற்காக அவரது உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்குச் செல்லும் என்று ஒருவேளை அந்தச் சிறுமியின் உள்ளுணர்விற்குப் புரிந்திருக்கலாம். தந்தையும், தாயும் மொத்தக் குடும்பமும் சிறையில் வாட ஆனந்த பவனத்தின் பெரிய அறைகளில் தனிமையை அணைத்து உறங்க வேண்டிய துயரம் இந்திராவுக்கு.சிறையில் இருந்து தனது தந்தை எழுதும் கடிதங்களில் மட்டுமே உயிர்த்திருந்தது அவரது உலகம்.பிறகு சுதந்திரப்போராட்டத்தில் உதவி புரிய வானரசேனை எனும் சிறுவர் குழுக்களை இந்திரா கட்டி எழுப்பினார்.
மிகுந்த மகிழ்ச்சியோடும், மன உறுதியோடும்.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகள் முகாமில் இரவு பகல் பாராது உண்ண, உறங்க நேரமில்லாது ஓய்வின்றிப் பணியாற்றினார் இந்திரா.உலக நாடுகளுக்கு தனது தந்தை நேருவோடு சுற்றுப்பயணம் செய்தபோதும்,பிரதமர் வீட்டை நிர்வகிக்க நேர்ந்த போதும் இந்திரா உலக அரசியலை ஆழமாகக் கற்றார்.இவ்வளவு பெரிய அனுபவம், தியாகப் பாரம்பரியம் இருந்தபோதும் அவர் ஒரு பெண் என்றும்,பொம்மை என்றும் எள்ளி நகையாடப்பட்டார், குறைத்து மதிப்பிடப் பட்டார்.ஆரம்பம் முதலே உணர்சிகளை ஒதுக்கிவைத்துப் பழக்கப்பட்ட இந்திரா, இரும்புக்குணம் கொண்டவராக இருந்ததில் வியப்பில்லை. அதுதான் அந்தப் பெண்மணி ஒருசில சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கக் காரணமாகவும் இருந்தது. இந்திராவோ தனக்கான, தனது தேசத்திற்கான வரலாற்றை எழுதும் இடத்தில் இருந்தார்.பாகிஸ்தானை உடைத்து ,பலவீனப்படுத்தி பங்களாதேசத்தை அவர் உருவாக்கியபோது ஆசியாவின் வரலாற்றையும் சேர்த்தே எழுதினார். பசுமைப் புரட்சி,வெண்மைப் புரட்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது. இனி உணவுக்காக அமெரிக்காவிடம் பிச்சை எடுக்க வேண்டியதில்லை என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்ததும், அணுகுண்டை வெடித்ததும்  வங்கிகள்  தேசியமயம் ஆக்கபட்டதும் அவர் ஆட்சிக் காலத்தில் தான்.தனது எமன் தனக்கு அருகிலேயே இருக்கிறான் என்று தெரிந்தும் தேச ஒற்றுமைக்காக தனது உயிரையே தியாகம் செய்யத் துணிந்தார்.
வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையும்,தியாகங்களையும் செய்து ,இந்தியாவை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை நோக்கி வழிநடத்திய வர் இந்திராகாந்தி.

அக்டோபர் 31 இந்திராகாந்தி நினைவு தினம்.

No comments:

Post a Comment