NFTECHQ

Friday 18 November 2016

திருமணமாம்
திருமணமாம்
கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் - ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ நேற்று முன்தினம் இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை. மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.
இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.
மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் - கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்த சிசு மூச்சை நிறுத்திவிட்டது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார். பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, கடந்த 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. ஒவ்வொரு உயிருக்கும் பின்னுள்ள கதைகளைப் படிக்கையில் மனம் நொறுங்கிப்போகிறது.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ரகுநாத் வர்மா, ஏழை விவசாயி சோனார் போன்றவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் கர்நாடகத்தைச் சேர்ந்த - நாடறிந்த ஊழல் முதலைகளில் ஒன்றான, முன்னாள் பாஜக அமைச்சர் - ஜனார்த்தன ரெட்டிக்கு ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலமே அதிர ரூ.500 கோடியில் அவருடைய மகளின் திருமணத்தை நடந்தியிருக்கிறார். மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைகள், தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என்று 50,000 விருந்தினர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
தங்க ஜரிகையுடன் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களுக்கான செலவு மட்டுமே ரூ. 1 கோடி என்கிறார்கள்.
ரெட்டியின் மகள் பிராமணி திருமண நாளன்று அணிந்திருந்த சேலையின் மதிப்பு ரூ.16 கோடி என்கிறார்கள். நகைகளின் மதிப்பு ரூ.84 கோடி என்கிறார்கள்.
கள்ளப் பொருளாதாரத்தை முடக்குகிறேன் என்று ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மூன்று மணி நேர அவகாசத்தில் செல்லாததாக்கிய ஒரு அரசு ஆட்சியில் இருக்கும்போது, இந்தத் திருமணம் எப்படி இப்படி நடந்தது?
சுரங்க மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சுமார் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவர், தனது மகள் திருமணத்துக்கு இத்தனை கோடி செலவிட எப்படி முடிந்தது?
கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி சொல்கிறார், “வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எப்படி நடவடிக்கை எடுக்கும்? பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவைக்கும் அல்லவா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ரெட்டி!”
கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி சொல்கிறார், “வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எப்படி நடவடிக்கை எடுக்கும்? பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவைக்கும் அல்லவா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ரெட்டி!”

நன்றி தமிழ் இந்து 18.11.2016

No comments:

Post a Comment