NFTECHQ

Thursday 5 October 2017

எதிர்காலத் தலைவர்கள்

ஓர் உற்பத்தி நிறுவனம் அல்லது சேவை நிறுவனம், தனது வளர்ச்சிக்காகத் தரத்தினை உறுதி செய்தல், அதனை இடைவிடாது மேம்படுத்துதல், தனது சேவையை - உற்பத்தியை விரிவாக்குதல், சந்தையில் போட்டி மற்றும் அதனை சமாளிக்கும் திட்டங்கள், ஊழியர்களின் நலன், அவர்களுக்கு பயிற்சியளித்தல், லாபம் ஈட்டுதல், இவை தொடர்பான அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டங்கள் போன்றவற்றை அந்நிறுவனங்களின் உயர்நிலை தலைவர்கள் மூலமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் .
இன்னொருபுறம், களத்தில் - உற்பத்திக்கூடத்தில், அந்தப் பணிகளை, பொருள்களை உருவாக்குவது, சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தருவது எனக் கடைசி மட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயல்படுத்துவர்.
இவ்விரண்டு பெரும் பிரிவுகளுக்கு இடையில் ஒரு மிக முக்கியமான இணைப்புச் சங்கிலியாக இரண்டாம் கட்ட நிர்வாகம் செயல்படும்; இந்த இரண்டாம் கட்ட நிர்வாகம் என்பது மிக மிக முக்கிய அம்சம் ஆகும்.
எந்த ஒரு நல்ல நிறுவனமும், தனது வளர்ச்சியின் அங்கமாக, இந்த இரண்டாம் கட்ட அதிகாரிகளை, அடுத்த கட்டதுக்குத் தயார் படுத்தும்.
சில நிறுவனங்களில்- 'எதிர்காலத் தலைவர்கள்' என ஒவ்வொரு துறையிலும் சிலரைக் கண்டெடுத்து சவாலான பணிகளில் ஈடுபடுத்துவது, முக்கிய பேச்சு வார்தைகளில், திட்டங்களில் இணைத்துக் கொள்ளுவது என, ஒரு செயல் திட்டத்தோடு, அவர்களது திறமையை வளர்ப்பார்கள்
அவர்களை அதிக பொறுப்புக்களை ஏற்கவும், எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்கும் - போட்டிகளுக்கும் ஈடு கொடுப்பவர்களாகவும் அருகில் இருந்து பயிற்றுவித்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தலைமை பொறுப்புக்கு தயார் செய்வர்.
இத்தகைய திறமைசாலிகள் - ஊக்கப்படுத்தப்படும்போது, நிறுவனத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யத் தவறினால், ஒரு நிறுவனம், தனது எதிர்கால திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாது, உற்பத்தி வீழ்ச்சி - தரம் குறைவு படுதல் - நஷ்டம் - வாடிக்கையாளர் அதிருப்தி போன்றவை ஏற்படும்
மேலும், இவற்றைவிட முக்கியமாக, மூப்பு - மரணம் - பணி ஓய்வு போன்றவற்றின் காரணமாக அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் விலகும்போது - வெற்றிடம் ஏற்படாத வண்ணம் இத்தகைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் - எதிர்காலத் தலைவர்கள் - அந்த இடத்தை நிரப்புவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட தலைமை - 'எதிர்காலத் தலைவர்கள்' - என்பது, தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல - அரசியல் கட்சிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது
லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனத்தையும், மக்கள் தொண்டு, அரசு நிர்வாகம் என வேறு தளத்தில் செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகளையும் ஒப்பீடு செய்வது தவறல்ல.
ஓர் அரசியல் கட்சியின் தலைமை, கொள்கைகளை வகுப்பது - அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டங்களை வகுப்பது, தேர்தலில் போட்டி, வெற்றிக்கு வழி வகுப்பது என செயல்படும்.
கட்சியின் கொள்கைகளால் - தலைமையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் என ஒரு சாராருக்கும் தலைமை என இன்னொரு சாராருக்குமிடையில் ஒரு முக்கியமான இணைப்பு சங்கிலியாக அக்கட்சியை சார்ந்த பேச்சாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - எழுத்தாளர்கள் - தொழிற்சங்கவாதிகள் - கட்சியின் அடுத்த மட்ட நிர்வாகிகள் என்ற பல்வேறு நபர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பார்கள்
தன்னம்பிக்கையும் திறமையும் மிக்க தலைவர்கள், இவர்களை எதிர்காலத்தில் அதிக பொறுப்புகளை ஏற்கும் திறமையான தலைவர்களாக உருவாக்குவார்கள். ஆனால் இன்று இவை எல்லாம் பழைய கதை
அரசியலில் கொள்கைப்பிடிப்பு - சேவை மனப்பான்மை போன்றவை பெருமளவில் நீர்த்துப் போயிருக்கும் நேரமிது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் அறிவும் தீர்க்க தரிசனமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக திகழ்வதும் அரிதாகி வருகிறது
இவர்களில் பலர், தங்களது தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளுவதில் மட்டுமே நாட்டம் காட்டுவதால், அடுத்த தேர்தலை தாண்டி சிந்திப்பதுமில்லை; அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதுமில்லை
சில கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களை தயார் செய்வதனைவிட, கட்சி வளர்ச்சியின் செலவில் தனது வாரிசுகளை உருவாக்குவார்கள். சில கட்சிகளில், தன்னால் உருவாக்கப்படுபவர்களால், அரசியலில் தனது இடத்தையே இழப்பவர்களும் உண்டு. எனவே, பெருமளவு கட்சிகளில், இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்குவதே இல்லை
சில கட்சிகளில், கவலை தரும் இன்னொரு அம்சம், திறமையைவிட விசுவாசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, திறமையற்ற விசுவாசிகளையே இரண்டாம் கட்டத் தலைவர்களாக - எதிர்காலத் தலைவர்களாக -அடையாளம் காட்டும் போக்கு ஆகும். இத்தகையோரால், ஒரு நெருக்கடியான சூழலில், கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது போய்விடும்.
இத்தகைய, சரியான இரண்டாம் கட்டத் தலைமை அற்ற ஒரு நிலை, ஆளும் கட்சியில் ஏற்படும்போது சிக்கல் அதிகமாகும். இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பொறுப்புகளை ஏற்கும்போது,சரியான பயிற்சி மற்றும் திறமையின்மையால் கட்சி மட்டுமின்றி ஆட்சியும் பாதிக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும்.
இவற்றை நோக்கும்போது, அடுத்த கட்டத் தலைவர்களை - எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது, தொழிற்கூடமாக இருப்பினும் - சேவை நிறுவனமாக இருப்பினும் - அரசியல் கட்சியாக இருப்பினும், எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று உணர முடிகிறது.
இத்தகைய முக்கிய பொறுப்பு, ஒரு நிறுவனத்திற்கோ - அரசியல் கட்சிக்கோ மட்டுமல்ல. இவை இரண்டையும்விட ஒவ்வோர் ஆசிரியருக்கும் - பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. இவர்கள்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களை - நல்ல தலைவர்களை உருவாக்க, சரியான அடித்தளம் அமைப்பவர்கள்.
 

நன்றி தினமணி 05.10.2017

No comments:

Post a Comment