NFTECHQ

Tuesday 23 January 2018

வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அதற்கு சரியான நேரமாம்

மக்களே உஷார்


 எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் ஏடிஎம் எண்ணைக் கேட்க மாட்டோம், ஓடிபி எண்ணைக் கேட்க மாட்டோம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனாலும், வங்கி மோசடி குறித்த செய்திகள் ஒருநாளும் தவறுவதில்லை. விதவிதமாக மோசடிச் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (71) என்ற மூதாட்டி, வங்கி மோசடியில் ரூ.90 ஆயிரத்தை இழந்த அதிர்ச்சியில் மரணம் அடைந்ததுதான்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறிய மோசடி நபர்கள், ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டு தேதி முதிர்வடைந்துவிட்டதாகவும், அட்டை எண்ணைக் கூறினால் அதனை புதுப்பித்துக் கொடுப்பதாகக் கூறி, ஏடிஎம் கார்டின் எண் மற்றும் ஓடிபி எண்ணையும் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். சிறுக சிறுக சேமித்த தொகையை இழந்த அதிர்ச்சியில் ஜெயலட்சுமி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
பண மோசடியில் பணத்தை இழந்த எத்தனையோ குடும்பங்கள் வாழ்க்கையை இழந்திருந்தாலும், முதல் முறையாக ஒரு உயிரும் பறிபோயுள்ளது.
இது குறித்து பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஜெயராஜ் கூறுகையில், சமீபகாலமாக செல்போன் மூலமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுவது அதிகமாக நடக்கிறது. எனவேதான், புதிதாக ஏடிஎம் அட்டையைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களிடமும், எந்த காரணத்தைக் கொண்டும் ஏடிஎம் அட்டையின் எண்ணையோ, ஓடிபி எண்ணையோ யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற மோசடிகள் குறித்தும் அவர் சில குறிப்புகளை எடுத்துரைத்தார்.
அதாவது, வழக்கமாக வங்கிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் அது இலவச அழைப்பு எனப்படும் டோல் ஃப்ரீ எண்களில் இருந்தே வரும். ஆனால், இந்த மோசடியாளர்களின் அழைப்பு டோல் ஃப்ரீ எண்களைப் போல் அல்லாமல், சாதாரண செல்போன் எண்களில் இருந்துதான் வரும்.
அடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் இதுபோன்ற மோசடி செல்போன் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் குறிப்பாக பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள். ஏன் என்றால், வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை இதுபோன்ற மோசடியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அப்பாவிகள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து உடனடியாக வங்கிக்குச் சென்றால் கூட, வங்கி மூடப்பட்டிருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருப்பதால், வாடிக்கையாளர் வங்கியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அதேபோல இதுபோன்ற மோசடிகளைப் பார்த்தால் பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் எனப்படும் POS என்ற பரிமாற்றம் மூலமாகத்தான் பணம் களவாடப்பட்டிருக்கும். பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் அதனை மீட்பது என்பது முடியாத காரியம். எனவே, இதுபோன்ற வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயராஜ்.

நன்றி :  தினமணி

No comments:

Post a Comment