NFTECHQ

Tuesday 27 February 2018


இப்படியும் ஒரு இளைஞன்
ஆர்டிஐ ஆர்வலர் கிருஷ்ணா முராரி யாதவ்  
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இளைஞர் ஒருவர் சேவை செய்து வருகிறார்.

உத்தரப்பிரேதசம் கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி யாதவ்(வயது29) என்கிற இளைஞர்தான் இந்த சேவையைச் செய்து வருகிறார்.

 தனக்கு சொந்தமாக அலுவலகம்கூட வைத்துக் கொள்ளாமல், ஒரு தேநீர் கடையில் அலுவலகத்தை நடத்தி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். இப்பகுதி மக்கள் இவரை கே.எம்.பாய் என்று உரிமையுடன் அழைக்கிறார்கள்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் இருந்த கே.எம்.யாதவுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையும், கூர்மையும் தெரியத் தொடங்கியது. இதனால், தான்பார்த்த வேலையை உதறி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புறப்பட்டுவிட்டார்.
இந்த சேவைக்காக, பொம்மிதளா கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சார்பில் ஸ்பூர்த்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கே.எம்.யாதவ் பெற்று உள்ளார்.

இது குறித்து கே.எம்.யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
"இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் பிரிவில் பணியில் இருந்தேன். அப்போது, ஏராளமான மக்கள் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது ஏன் என நாள்தோறும் கேட்டு வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஒருநாள், பொது தகவல் அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பினேன். அதில், எத்தனை பேரின் சமையல் கேஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது, ஏற்கப்பட்டுள்ளது என்று கேட்டேன். ஆனால் எனக்கு பதில் இல்லை. அதன்பின் 2-வது முறையாக மேல்முறையீடு செய்ததில், பொது மேலாளர் எனக்கு பதில் அளித்தார்.
அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து, ஒப்பந்ததாரரை போய் சந்தித்து கேளுங்கள் எனக் கூறி, விண்ணப்பங்கள் அனைத்தையும் ஏற்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதுதான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
அதன்பின் கடந்த 2013ம் ஆண்டு வேலையை உதறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயக்கமாக நடத்த தொடங்கினேன். ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகள், பயன்கள், விவரங்களை ஒரு துண்டுபிரசுரங்களாக அச்சடித்து விநியோகம் செய்தேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்கூட, 95 சதவீத மக்களுக்கு ஆர்டிஐ குறித்து ஏதும் தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது கிராமங்களில் நான் பயணம் மேற்கொண்டபோது தெரிய வந்தது.
இதையடுத்து, மக்கள் என்னை சந்திப்பதற்காக கான்பூரில் உள்ள ஒரு தேநீர் கடையைத் தேர்வு செய்து அங்கு சந்தித்து வந்தேன். இதனால், அந்த தேநீர் கடையின் 70 வயது முதலாளி ரமேஷ் சந்திர குப்தாவும் எனக்கு சிறந்த நண்பராகிவிட்டார்.
இதனால், காலப்போக்கில் அந்த தேநீர்கடைக்கும், ஆர்டிஐ டீக்கடை என்று பெயர் மாறும் அளவுக்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர்.
இந்த தேநீர் கடையை எனது அலுவலகமாக மாற்றினேன். மக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் புகார் மனுக்களைப் பெற்று, ஆர்டிஐ மூலம் தகவல்களை பெற்றுத் தந்தேன். ரேஷன் கடை, சமையஸ் கேஸ் இணைப்பு, நிலப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆர்டிஐ மூலம் தகவல் பெற்று உதவினேன்.
நான் பெரிய மனிதர் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எப்படி தீர்வு கான்பது என்பதை சரியாகச் செய்யும் எளிமையான மனிதன் நான்.
எனக்கு நண்பர்களைத் தவிர வேறுசொத்துக்கள் ஏதும் இல்லை. ஆர்டிஐ சட்டத்தில் பிரிவு 6(1)ன் கீழ் எந்த இந்திய குடிமகனும் மனுத்தாக்கல் செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை, அரசு அலுவலகத்தில் இருந்து பெறலாம்"
இவ்வாறு யாதவ் தெரிவித்தார்.

யாதவ் குறித்து இதுவரை உள்ளூர் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் ஏராளமாக வந்துஇருக்கிறது, . பிபிசி இந்தி சேனலும் நேர்காணல் நடத்தி ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment